கொட்டும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை


கொட்டும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை


தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 1500 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியவுடன், கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பரவலாக பொழியத் தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.

தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்  நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்து வந்தது. நேற்று காலை நீர்வரத்து குறைந்து 20,000 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளல் பெய்த கனமழையின் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 50,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, செந்நிறத்தில் வரும் தண்ணீர் ஒகேனக்கல் பிரதான அருவி,  அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால்  ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், அருவி, ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 3வது நாளாக தடை நீடிக்கிறது. ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல், ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் வருவாய், தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சி, காவல் துறையினர் உள்ளிட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also read... வன்முறை அதிகரிப்பதற்கு படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் காரணம் - நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கோடை காலம் தொடங்கியதிலிருந்து ஒகேனக்கல்லுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்திருப்பதால், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

-செய்தியாளர்: சுகுமாா்.

Comments

Popular posts from this blog