அதிமுக உள்கட்சி தேர்தல் வழக்கு! ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு!
அதிமுக உள்கட்சி தேர்தல் வழக்கு! ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதனை எதிர்த்து, கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளருடைய அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும். அதேபோல நடந்துமுடிந்த உள்கட்சி தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.